பேட்டிகள்

வள்ளலார் பெயரில் பில்லி சூனியம் வரை வந்துவிட்டது

அசோகன்

தமிழக சமய வரலாற்றில் சுமார் 60 ஆண்டுகாலமாக பின்னிப் பிணைந்த வாழ்வு வடலூரில் வாழும் தவத்திரு ஊரன் அடிகளுக்கு உரித்தானது. இன்று எண்பது வயதைத் தாண்டிய நிலையிலும் திருவருட்பா அகவலைப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார். முக்கியமான பல பதிப்புப் பணிகளை இன்றும் செய்துவரும் அறிஞர் ஊரன் அடிகளைச் சந்தித்தோம். வெண்ணிற வேட்டி. மெலிந்த உடலின்மேல் அகலமான வெண்ணிறத் துண்டு. நன்கு மழித்து பளபளக்கும் தலை. மூக்குக்கண்ணாடிக்குள் இருந்து விரியும் கூரிய கண்கள்.

‘வாருங்கள் மாடிக்குச் செல்வோம்’ என்று அழைத்துச் செல்கிறார். அங்கே பழைய புத்தகங்களின் நெடி. வரிசையாக முக்கியமான தமிழ் இலக்கிய, தத்துவ நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. மிகப்பழைமையான அந்த நூல்களில் எல்லாம் தூசிப் படலம். எந்த நூல் எங்கே இருக்கிறது என்பதை அடிகளார் ஞாபகம் வைத்து உடனே எடுத்துக் காட்டுகிறார்.  திருச்சி அருகே சமயபுரத்தில் மிகப்பெரிய சைவப் பாரம்பரியம் மிக்க மிராசுதார் குடும்பத்தில் பிறந்தவர் ஊரன் அடிகள். இவரது பாட்டனார் பள்ளித் தலைமை ஆசிரியர் என்பதால் சிறுவயது முதலே அனைத்து நீதிநூல்களும் ஊரன் அடிகளுக்கு மனப்பாடமாகப் பயிற்றுவிக்கப்பட்டன.

“எல்லா நூல்களிலும் காவி அணிந்த துறவிகளையே கண்டுவந்ததாலோ என்னவோ எனக்கு சிறு வயதிலிருந்தே துறவறம் மீது நாட்டம் அதிகமானது” என்கிற ஊரனடிகள் கல்லூரிப்படிப்பை திருச்சி தேசியப்பள்ளியில் பயின்றார். இண்டர்மீடியட் எனப்படும் வகுப்புடன் தமிழ் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தால் கல்லூரியைக் கைவிட்டார். கரந்தை புலவர் கல்லூரியில் புலவர் படிப்புக்காகப் போனபோது திருவாவடுதுறை ஆதினத் தம்பிரான் ஒருவர் இவரைக் கண்டார். அதைத் தொடர்ந்து அந்த மடத்தில் தம்பிரானாக இவர் சேர விரும்பினார். இத்திட்டத்தை அறிந்த இவரது தாயார் பதறி, உடனே படிப்பைக் கைவிடச் செய்து அழைத்து வந்துவிட்டார். அதன்பின்னர் பொறியியல் தொடர்பாகப் படித்து சிவில் என்ஜினியரிங் தொழில்நுட்பத் தேர்வுகளை எழுதினார். பின்னர் ஸ்ரீரங்கம் நகராட்சியில் நகரமைப்பு கட்டட ஆய்வாளராகப் பணிபுரிந்தார். ஸ்ரீரங்கம், வேலூர், திருச்சி போன்ற நகராட்சிகளில் 13 ஆண்டுகள் பணியாற்றியவர் வேலையை விட்டுவிட்டு துறவு பூண்டு வடலூருக்கு நிரந்தரமாக வந்துவிட்டார். வள்ளலார் மீதிருந்த ஈடுபாடு அவரை வடலூருக்கு இட்டுவந்தது. அரசு வேலை பார்த்தபோது ஆண்டுக்கு நான்கைந்து முறை வழிபாட்டுக்காக வடலூர் வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

“எம் 22 வயதிலேயே வீட்டில் சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம் என்ற பெயரில் நூல்களைச் சேகரிக்க ஆரம்பித்தேன். என் தாத்தாவின் 200க்கும் மேற்பட்ட பழம் நூல்களும் எனக்குக் கிடைத்தன. வடலூருக்கு 1969-ல் வருகையில் என்னிடம் 3000 நூல்கள் சேகரிப்பில் இருந்தன. 1965-ல் வள்ளலார் தொடங்கிய சன்மார்க்க சங்கத்தின் நூற்றாண்டுவிழா வந்தது. இது 65 அல்ல 67 என்று ஒருவர் சர்ச்சையைக் கிளப்பவே, இது தொடர்பாக இரண்டு பிரிவு ஆகிவிட்டது. ஆய்வாளர் என்கிற முறையில் என்னிடம் கேட்டார்கள். நான் ஆதாரத்துடன் 1965தான் என்றொரு அறிக்கை கொடுத்தேன். அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.”

வடலூரில் முன்னாள் சென்னை மாகாண முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் சுத்த சன்மார்க்க நிலையத்தின் பராமரிப்பு இவர் வசமும் பொள்ளாச்சி மகாலிங்கத்தின் வசமும் 1969-ல் வந்தது. இந்நிலையில் இவர் வள்ளலார் தெய்வ நிலையங்களின் அறங்காவலராக நியமிக்கப்பட்டு 30 ஆண்டுகள் அறங்காவலர் குழு நிர்வாகியாக பணிபுரிந்தார்.

திருஅருட்பா ஆறு திருமுறைகளும் ஒரே புத்தமாக பதிப்பித்தது அடிகளாரின் மிக முக்கியமான பணி. 1972-ல் 1330 பக்கங்களில் இந்த நூல் வெளியானது. இதற்கு முன்பாக ஆறு திருமுறைகளும் ஒரே புத்தகமான வெளிவந்தது 1924-ல்தான். புதுக்கோட்டை ராமசந்திரபுரம் தி.நா. முத்தையா செட்டியார் வெளியிட்டார். இதுவரை வந்த பதிப்புகளில் சிறந்ததாகச் சொல்லப்படுவது பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பும் ஊரனடிகளின் பதிப்புமே. இன்றும் ஊரனடிகளின் பதிப்பு கிடைக்கிறது. திருவருட்பாவை வரலாற்றுமுறையில் ஆய்வு செய்து, பதிப்பு வரலாறு, படி வேறுபாடுகள், பாட வேறுபாடுகள், பல்வேறு அட்டவணைகள், யாப்பு, பாவகை பற்றிய குறிப்புகளுடன் வெளியிட்டிருக்கிறார் இவர். சமீபத்தில் அருட்பெருஞ்சோதி அகவல் உரையும் மிகுந்த ஆய்வுகளுடன் இவரால் வெளியிடப்பட்டிருக்கிறது. வள்ளலாரின் பல உரைநடை நூல்கள் அனைத்தையும் 78-ல் ஒரே நூலாக திருஅருட்பா உரைநடைப்பகுதி என்ற பெயரில் வெளியிட்டார். சைவ ஆதீனங்கள் என்ற பெயரில் தமிழ்நாட்டில் உள்ள 18 சைவ ஆதீனங்களின் வரலாற்றை ஒரே நூலாக எழுதியிருக்கிறார்.

“வள்ளலார் சைவத்தைத் தாண்டிய ஒரு வழிமுறையைத்தான் பேசினார். ஆனால் நீங்கள் சைவத்தைப் பற்றி நூல்கள் எழுதியிருக்கிறீர்களே?”

“தென்னகத்தின் முக்கியமான சித்தாந்தங்கள் அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம், சைவ சித்தாந்தம் என நான்கு. இதில் முதல் மூன்றையும் பற்றி நிறைய நூல்கள் உள்ளன. ஆனால் சைவ சித்தாந்தம் பற்றி அவ்வளவாக பதிவுகள் இல்லை. எனவே தான் இந்த பணியை நாம் செய்வோம் என்று நூல்களை எழுதினேன். பொதுவாக வேதாந்தத்துக்கு இருக்கும் செல்வாக்கு சித்தாந்ததுக்கு இல்லை. காவிக்கு இருக்கும் மதிப்பு வெள்ளைக்கு இல்லை. சமஸ்கிருதத்துக்கு இருக்கும் மதிப்பு தமிழுக்கு இல்லை.. அத்துடன் திருவருட்பாவை வேலாயுத முதலியார் முதல்முதலில் பதிப்பித்தபோது அதற்கு சாற்றுக் கவி தந்தவர் ஒரு சைவ ஆதினம்தான். மதுரை ஆதினத் தம்பிரான். ‘தண்ணீர் விளக்கெரிய...’ என்று தொடங்கும் பாடல். தாண்டவராயத் தம்பிரான் உள்ளிட்ட சுமார் ஐந்து ஆதீனங்களுடன் வள்ளலாருக்கு தொடர்பு இருந்தது. ஆறுமுக நாவலர் பிரச்னைக்கு அப்புறம்தான் சைவ ஆதினங்களுடன் விரிசல் ஏற்பட்டுவிட்டது. அத்துடன் சாதிமதங்கள் இல்லை என்கிற வள்ளலாரின் கொள்கையும் காரணம். இது பற்றி நான் விரிவாக எழுதி இருக்கிறேன்”

“ஏற்கெனவே திருவாவடுதுறை ஆதீனத் தம்பிரான் ஆகும் வாய்ப்பு உங்களுக்கு வந்தது. சைவ ஆதினங்களுக்குத் தலைமையேற்கும் அளவுக்கு அனைத்து பின்னணியும் வளமாகக் கொண்டவர் நீங்கள் அல்லவா?”

ஊரனடிகள் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. “குன்றக்குடி அடிகளாருக்கும் எனக்கும் எழுதப்படாத ஒப்பந்தம்: அந்த மடத்துப்பொறுப்புக்கு நான் வரவேண்டும் என்பதுதான். அவர் என்னிடம் பலமுறை அழைத்துப் பார்த்தார். எனக்கோ வடலூரில் பணிகள் அதிகம். என்னை விட அவர் எட்டு வயது மூத்தவர். ஒருமுறை நான் அவரிடம், ‘தங்களை விட நான் எட்டுவயதே இளையவன். எனக்கு இளவரசுப் பட்டம் கட்டுவதால் என்ன பயன்? நான் உங்களை விட முன்கூட்டியே போய்ச் சேர்ந்துவிட்டால் என்ன ஆகும்?’ என்றேன். குன்றக்குடி அடிகளார், ’உங்கள் வாயிலிருந்து இப்படி சொற்கள் வரலாமா?’ என்று அதிர்ச்சி அடைந்தார். அதன்பிறகு என்னை அழைப்பதை விட்டுவிட்டார்”

“வள்ளலார் மரணமில்லாப் பெருவாழ்வு என்பதைச் சொல்லி அனைவரும் அதை அடையலாம் என்கிறார். நீங்களும் இது பற்றி நூல் எழுதியிருக்கிறீர்கள்? மரணமில்லா பெருவாழ்வு என்றால் என்ன?”

“உடம்பு மண்ணில் விழாமல் அதுவே ஒளிவடிவமாக மாறிவிடுவதுதான் மரணமில்லாப் பெருவாழ்வு. உடம்பொடு மறைதல். அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர் போன்றவர்களும் இதுபோல மறைந்துள்ளனர். இது ஒரு கலை. இதை தமிழ்நாட்டு சித்தர்கள் அறிந்துள்ளனர். ஆழ்வார்களில் ஆண்டாள், திருப்பாணாழ்வார் இருவரும் உடம்புடன் மறைந்தவர்கள். சைவசித்தாந்தத்திலும் இது பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆனால் விவரமாக விளக்கப்படவில்லை; பேசப்படவில்லை. இந்த நிகழ்வில் உடல்ரீதியான இருப்பு இருக்காது. கடவுளை வேண்டிக்கொள்வதுபோல் இவர்களையும் வேண்டிக்கொள்ளலாம். ‘குருவே சிவமென கூறினன் நம்பி’ என்று சைவத்தில் கூறப்பட்டுள்ளது. குருமார்களுக்கு கடவுளுக்கு உள்ள சக்தி உண்டு. வேண்டுவதைத் தருவார்கள். குருமார்கள் என்றால் இப்போதிருப்பவர்கள் அல்ல... பழைய குருமார்களான ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்ற கடவுள்நிலையை அடைந்தவர்கள் தருவார்கள்”

“வள்ளலாருடைய துணைவியாரின் சமாதி மைலாப்பூரில் இருப்பதாக சில ஆய்வாளர்கள் கூறி இருக்கிறார்களே? உண்மையா?”

“தப்பும் தவறுமாக ஆய்வு செய்கிறார்கள். அது உண்மை அல்ல. இப்படித்தான் ஆகிவிடுகிறது. உதாரணத்துக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு வள்ளலாரின் அணுக்கத் தொண்டர் ஒருவரின் சமாதி வெட்டவெளியில் இருந்தது. சின்ன செங்கல் மேடைதான் இருந்தது. அந்த இடத்தைப் பராமரிக்க ஒருவர் அறிமுகமாகி என்னை அழைத்தார். அந்த நினைவிடத்தில் நானும் போய் ஒருநாள் விளக்கு ஏற்றி வைத்துவந்தேன். இப்போது அந்த இடம் புகழ்பெற்றுவிட்டது. ராமலிங்க சுவாமி அணிந்த பாதக்குறடு என்று தேக்குமரத்தில் ஒன்றை புதிதாக செய்து அங்கே வைத்திருக்கிறார்கள். அவருடைய பழம்பெரும் பதிப்பு என்று ஒன்றை வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் எங்கிருந்து வந்தது? இப்போது நான் அவற்றை மறுத்தால் என்னைத் தாக்குவார்கள். வள்ளலார் பேரிலேயே இப்போது பில்லி சூனியம் வைப்பது, எடுப்பது எல்லாம் வந்துவிட்டது..”

“நீங்கள் நெடுங்காலமாக வள்ளலார் மீது ஈடுபாடுகொண்ட துறவி. உங்கள் வாழ்க்கையில் நடந்த அற்புதங்கள் ஏதேனும் உண்டா?”

“என்னுடைய அனுபவங்கள் சிலவற்றை நான் எழுதி உள்ளேன். சிலவற்றை எழுதவில்லை. என்னாலே ஆதரிக்கப்பட்டு வளர்ந்தவர்களே இன்று பலர் வள்ளலாரைப் பார்த்தேன் என்று சொல்லிக் கிளம்பிவிட்டார்கள். இப்போது போலிகள் மலிந்துவிட்டன. அதனால நான் எதையும் சொல்லிக்கிறது கிடையாது. என் சேகரிப்பில் இருக்கும் பழம் நூல்கள் சில கிட்டியதே அற்புத நிகழ்வுகள்தான். நான் ஸ்ரீரங்கத்தில் வேலை பார்த்தபோது கோயில் திருவிழாவின் போது பழையபொருட்கள், புத்தகங்கள் எல்லாம் விற்பனைக்கு வரும். அதில் வள்ளலாருடைய பழைய பாடல்கள், பதிப்புகள் எதாவது கிடைக்குமா என்று தேடுவேன். வெறிபிடித்ததுபோல் புத்தகம் வாங்குவேன். ’சித்தாந்தம்’, ’செந்தமிழ்ச்செல்வி’ போன்ற பத்திரிகைகளின் பழைய பிரதிகளும் உள்ளன. வள்ளலாரின் திருவருட்பா முதல்பதிப்பு (வேலாயுத முதலியார் பதிப்பு) இருக்குமா என்று தேடிக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு கனவிலும் நனவிலும் சேராத ஒரு காட்சி அலுவலகத்தில் இருந்தபோது கிட்டியது. ஸ்ரீரங்கம் கோயில் திருவிழா புத்தகக் கடைகளில் ஒரு குறிப்பிட்ட கடையில் குறிப்பிட்ட அடுக்கில் அது இருப்பதாகத் தெரிந்தது. மறுநாள் வேலை முடிந்ததும் அங்கு போனேன். அதே இடத்தில் புத்தகம் கிடைத்தது. இதுபோல பல பிரதிகள் எனக்குக் கிடைத்தன.

வள்ளலார் எழுதிய ’ஜீவகாருண்ய ஒழுக்கம்’ நூலின் அரிய முதல் பதிப்பு என்னிடம் இருக்கிறது. முக்கியமானவர்களிடம் காண்பிப்பது வழக்கம் என்று சொல்லி என்னிடம் அதை காண்பிக்கக் கொண்டுவந்தார் பரமதயாளன் பிள்ளை என்பவர். அதை என்னிடமே அவர் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

திருவாசகத்தை வள்ளலார் ஏடாக வைத்திருந்தாரா நூலாக வைத்திருந்தாரா என்று எனக்கு ஐயம் இருந்தது. அவருக்கு திருவாசகம் முழுவதும் மனப்பாடம் என்பது வள்ளல்பெருமானே எனக்குத் தெரிவித்த செய்தி. திருவாசகம் முதல்முதலில் பதிப்பித்தவர் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர். ஒரு நாள் ஒரு புத்தகம் என் கனவில் விரிந்தது. திருவாசகம் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் பதிப்பித்தது என்று அதன் தலைப்புப்பக்கம் மட்டும் தெரிந்தது. கனவில்தான் இதுபோன்ற பலசெய்திகளை நான் அடைந்திருக்கிறேன். ப்ரிண்டிங் உருவானது பற்றிய நூல் ஒன்று எனக்குக் கிடைத்தது. அதில் நான் கனவில் கண்ட திருவாசக முதல்பதிப்பின் தலைப்புப் பகுதி பக்கம் மட்டும் அச்சிடப்பட்டிருந்தது. ஆனால் ஒரு இடத்தில் மட்டும் நடராஜர் உருவம் இருந்தது. அது எப்படி வந்தது என்று பார்த்தால், நண்பர் ஒருவர் ஒரு பழம்பெரும் நூலகத்தில் இருந்து அந்த நூலாசிரியர் இந்த நூலை வாங்கிச் சென்று அதன் நகல் எடுக்கும்போது அந்த நூலக ரப்பர் ஸ்டாம்ப்பை மறைக்க நடராஜர் படத்தை ஒட்டியிருக்கவேண்டும் என்று விளக்கினார்.”

“கடைவிரித்தேன் கொள்வாரில்லை; கட்டிக்கொண்டோம் என்று வள்ளலார் சொல்வதற்கான நிலை ஏன் ஏற்பட்டது?”

“வள்ளலார் வசனங்களில், பாடல்களில் எங்கும் அவர் இப்படிச் சொன்னதாக வரிகள் இல்லை. இது திருவருட்பாவின் மிகப்பழம் பதிப்புகளில் நூலாசிரியர் வரலாறு எழுதுவார்கள் அல்லவா? அதில் ஓரிடத்தில் வள்ளலார் சொன்னதாக வருகிறது. வள்ளலாரே நேரடியாக இப்படிச் சொன்னதாக பதிவுகள் இல்லை. இவ்வாறு உரைத்துவிட்டு அவர் அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக்கொண்டாராம். இரண்டு மாதங்கள் கழித்து திறந்துபார்த்தால் காலியாக இருந்தது. அவர் ஏற்கெனவே இப்படிச் செய்யக்கூடியவர்தானாம். அறைக்குள் இருந்து தாழிட்டுக்கொள்ளுதல்;  இன்னொரு இடத்தில் தோன்றுதல். ‘ட்ரையல் அண்ட் எர்ரர்’ என்பார்களே அப்படிச் செய்துபார்த்திருக்கிறார்.”

 நீண்ட உரையாடலுக்குப் பின்னர் அவரிடம் விடைபெற்றோம். 

செப்டெம்பர், 2014.